தேனெடுக்கும் வண்டினத்தை
தடுப்பதில்லை யாரும்=கேள்
பூமியின் பொதுவுடமை
பூக்களுக்கு தெரியும்!!

காயமிடும் மின்மினிகள்
கெடுப்பதில்லை யாரும்=கேள்
இயற்கையின் நடுநிலமை
இரவுக்கும் புரியும்!!

நீர்சிந்தும் அருவிகளை
நிருத்தவில்லை யாரும்=கேள்
சிந்துவதே அழகென்று
சிந்தும்நீர் அறியும்!!

நதிகளிடும் கோடுகளை
நினைக்கவில்லை யாரும்=கேள்
பூமிக்கேது எல்லையென்று
புற்கள்கவி புனையும்!!

விலங்கினங்கள் தங்களுக்குள்
விதைப்பதில்லை போரும்=கேள்
பிறப்பிலேது பேதமென்று
பித்தமின்றி அலையும்!!

ஆறறிவு மானுடமே
அறிந்ததில்லை நீயும்=கேள்
உன்னிலின்றி அடிமையேது
உலகமென்று விடியும்!!

இருவேறு இரத்தமென்று
இருப்பதில்லை மனிதம்=கேள்
உயிர்களுக்குள் பிரிவேது
உம்மினமே மடியும்!!

தீட்டுகின்ற கத்தியினால்
தீர்வதில்லை பசியும்=கேள்
அறிந்துகொண்ட வாழ்வுதனில்
ஆயுதங்கள் மறையும்!!

காகிதங்கள் மதிப்பேற்கும்
காலமெல்லாம் சாபம்=கேள்
காசுகளால் ஏழையென்றால்
கடவுளிருப்பின் பாவம்!!

பிறப்பொக்கும் உயிர்களுக்குள்
பிறப்பிலேது பேதம்=கேள்
சிறப்பொக்கும் வாழ்வுதனில்
சிந்தனையே வேதம்!!
===========================

குறிப்பு; அண்ணாமலை பல்கலைக்கழக

தமிழியல் துறையில் 2010ம் ஆண்டு நடைபெற்ற

கவிதை போட்டியில், நான் கலந்துகொண்டு எழுதியது.

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

பெத்தவங்க Copyright © 2015 by சடையன் பெயரன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book